சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 4 தொழிலாளர்கள் கருகினர்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை நிகழ்ந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 800–க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வருட தீபாவளிக்கான பட்டாசு தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் கனகபிரபு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு நவீன பட்டாசுகள் தயாரிக்கும் உரிமம் பெறப்பட்டு இருக்கிறது.
இந்த ஆலையில் 60–க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன. இந்த ஆலையில் நேற்று காலை வழக்கம் போல் பணி தொடங்கியது. 90 பெண் தொழிலாளர்கள் உள்பட 175 பேர் பணிக்கு வந்திருந்தனர்.
அப்போது ராக்கெட் வகை பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையில் இருந்த ராக்கெட் வெடிகள் வெடிக்கத் தொடங்கி புகை மண்டலமாக காட்சி அளித்தது.
அந்த அறையில் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுக்கிரவார்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 42), திருத்தங்கல் ஆலாவூரணி மாரிப்பாண்டி (47), காளையார்குறிச்சி ராமசாமி (67), எரிச்சநத்தம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த அழகுபாண்டி (26) ஆகியோர் உடல்கள் கருகின.
உடனே, சக தொழிலாளர்கள் ஓடி வந்து தீயை அணைத்து, 4 தொழிலாளர்களையும் மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன், தாசில்தார் பரமானந்தராஜா, தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலை தனி தாசில்தார் இப்ராகிம்ஷா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம், திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த வெடி விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.