குப்பைக் கழிவுகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளே மேலாண்மை செய்ய வேண்டும், காரைக்குடி நகராட்சி நிர்வாகம் தகவல்
100 கிலோவுக்கு மேல் சேரும் குப்பைக் கழிவுகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள்தான் மேலாண்மை செய்ய வேண்டும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி,
காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் சேரும் குப்பைக் கழிவுகளை சம்பந்தப்பட்ட நிர்வாகங்களே மறு சுழற்சி செய்து மேலாண்மை செய்து கொள்ள வேண்டும் என காரைக்குடி நகராட்சி அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து திடீரென முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் குப்பைக் கழிவுகள் வாங்குவதை நிறுத்தி விட்டது.
இதனால் மருத்துவமனைகளைச் சுற்றிலும் குப்பைக்கழிவுகள் குவிந்து கிடப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. எனவே மருத்துவமனைகளை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றக்கோரி டாக்டர்கள் விடுத்த கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை. இதனைத் தொடர்ந்து நகராட்சி முன்பு டாக்டர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி கோரினர்.
இதற்கிடையே இந்திய மருத்துவ சங்க மாநில செயலாளர் டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் டாக்டர்கள் நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் அடிப்படையில் 100 கிலோவுக்கு கீழ் உள்ள கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அகற்றி தருவதாகவும், அதற்கு மேல் சேரும் குப்பைக் கழிவுகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகங்கள்தான் மேலாண்மை செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இது குறித்து மருத்துவமனைகளின் கணக்கீடு எடுக்கப்பட்டது.