பெண் போலீசிடம் டிக்கெட் கேட்டதால் ஆத்திரம்: அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது போலீசார் சரமாரி தாக்குதல்
அரசு பஸ்சில் பயணம் செய்த பெண் போலீசாரிடம் கண்டக்டர் டிக்கெட் கேட்டதால் ஆத்திரமடைந்த மானாமதுரை சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து திருப்பத்தூர் மற்றும் சிவகங்கையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை,
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருபவர் கிருபாராணி. இவர் நேற்று முன் தினம் இரவு சிவகங்கை பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். இரவு 10 மணி அளவில் திருப்பத்தூரில் இருந்து மானாமதுரைக்கு சென்ற அரசு பஸ்சில் ஏறினார். சீருடையில் இருந்த கிருபாராணியிடம் பஸ் கண்டக்டர் முருகானந்தம் டிக்கெட் எடுக்க சொல்லியுள்ளார்.
ஆனால் பெண் போலீஸ் கிருபாராணி டிக்கெட் எடுக்காமல் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பின்னர் டிக்கெட் எடுத்துள்ளார். இது குறித்து கிருபாராணி செல்போன் மூலம் மானாமதுரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வாசிவத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இரவு 11 மணிக்கு மானாமதுரையில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு அந்த பஸ்சை மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்திவிட்டு பஸ் டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் முருகானந்தம் ஆகியோர் அங்குள்ள ஒய்வு அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது சப்–இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையில் போலீசார் அங்கு சென்று அங்கு இருந்த பணியாளர்களிடம் பஸ் டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் முருகானந்தம் ஆகியோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். ஆனால் பணியாளர்கள் அவர்களிடம் அவர்கள் 2பேரும் தூங்கிவிட்டனர். காலையில் வாருங்கள் விசாரணை செய்யலாம் என்று கூறியுள்ளர்.
ஆனால் அவர்களிடம் போலீசார், பஸ்சில் வரும் போது ஒரு பொருள் தொலைந்து விட்டது. அது பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளே சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த பஸ் டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் முருகானந்தம் ஆகிய 2 பேரையும் வெளியே அழைத்து வந்தனர்.
பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரையும் சராமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கும் அவர்களை போலீசார் அடித்ததால் அவர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போக்குவரத்துறை ஊழியர்கள் போலீஸ் நிலையம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த பஸ் டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் முருகானந்தம் ஆகியோர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் போலீசார் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசாரின் அராஜக நடவடிக்கையைக் கண்டித்து திருப்பத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பஸ்களை இயக்காமல் நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் பணிமனையில் 30–க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும் இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால் சொந்த ஊர்களுக்குச் சென்ற நபர்களும் பெரிதும் தவிப்புக்கு உள்ளாயினர். இந்த போராட்டம் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. இதையடுத்து திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) இளங்கோ தலைமையிலான போலீசார் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அராஜக தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். மேலும் அங்கு வந்த சிவகங்கை போக்குவரத்து மண்டல மேலாளர் ராமசாமி மற்றும் தொழிற்சங்க தலைவர் குமாரபிரசாத், திருப்பத்தூர் பணிமனை மேலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
இதேபோல் போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து சிவகங்கையிலும் நேற்று காலையில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பின்னர் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து அதன் பின்னர் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.