பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Update: 2018-06-15 23:00 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா உடையநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் தண்டபாணி (வயது 19). இவருடைய தாய் சாந்தியின் பெயரில் அதே கிராமத்தில் 2 ஏக்கர் 18 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை தன்னுடைய பெயரில் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி கடந்த சில வாரத்திற்கு முன்பு கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் தண்டபாணி மனு கொடுத்தார். இருப்பினும் இந்த மனு மீது உடனடி தீர்வு காணப்படவில்லை.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டபாணி, கொங்கராயப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக இருக்கும் சோமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரபு (33) என்பவரை அணுகி பட்டா மாற்றம் செய்து தரக்கோரி முறையிட்டார்.

அப்போது பட்டா மாற்றம் செய்து தர வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று தண்டபாணியிடம் பிரபு கூறியதாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தண்டபாணி, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, எப்படியாவது பட்டா மாற்றம் செய்து தரும்படி கூறினார்.

அதற்கு ரூ.10 ஆயிரத்தை உடனடியாக தரும்படியும், பணம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாற்றம் செய்து தர முடியும் என கறாராக கூறிய பிரபு, அந்த பணத்தை கொங்கராயப்பாளையம் கூட்டுசாலை அருகில் வந்து தன்னிடம் கொடுக்கும்படி கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத தண்டபாணி, இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரசாயன பொடி தடவிய பணத்தை தண்டபாணியிடம் கொடுத்து அதை பிரபுவிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அதன்படி தண்டபாணி ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று மாலை கொங்கராயப்பாளையம் கூட்டுசாலைக்கு சென்று அங்கிருந்த பிரபுவிடம் கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கியபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர் எழிலரசி, ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், மூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று கிராம நிர்வாக அலுவலர் பிரபுவை கையும், களவுமாக மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் அவரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை போலீசார் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்