எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய கோரி கைகளில் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்

மூங்கில்துறைப்பட்டு அருகே எரியாத தெருவிளக்குகளை சரி செய்ய கோரி கைகளில் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-15 22:30 GMT

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொரசப்பட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருக்களில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. மேலும் அப்பகுதியில் வி‌ஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

எரியாமல் கிடக்கும் தெரு விளக்குகளை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு தங்கள் கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எரியாமல் கிடக்கும் தெருவிளக்குகளை சரி செய்து தரக்கோரி சிறிது நேரம் கோ‌ஷமிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்