காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பிரம்மதேசம் அருகே காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-06-15 22:00 GMT

பிரம்மதேசம்,

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன்(வயது 47). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் காமாட்சி(வயது 17). இவர் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த வேன் டிரைவருக்கும், காமாட்சிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பெற்றோருக்கு தெரியாமல் காமாட்சியும், வேன்டிரைவரும் உயிருக்குயிராக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் தனது மகளின் காதல் விவகாரம் கஜேந்திரனுக்கு தெரியவரவே அவர் காமாட்சியை கண்டித்தார். மேலும் காதலனுடன் பேசக்கூடாது என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காமாட்சி வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதைப்பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காமாட்சியை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காமாட்சியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்