தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘‘கையகப்படுத்திய நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்’’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2018-06-15 20:30 GMT

கோவில்பட்டி, 

‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

பெரிய விசைப்படகுகளில் மீன்பிடிக்க அனுமதி

கடலில் மீன்பிடிக்க செல்ல 15 அடி நீளமும், 150 எச்.பி. திறனும் கொண்ட விசைப்படகுகள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 24 அடி நீளமும், 240 எச்.பி. திறனும் கொண்ட பெரிய விசைப்படகுகளில் சென்று கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்ற முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்தகைய பெரிய விசைப்படகுகளையும் கடலில் மீன்பிடிக்க அனுமதித்து உடனே அரசாணை பிறப்பித்தார்.

23 ஆயிரம் போராட்டங்கள்

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எப்படி சட்டம்–ஒழுங்கை பாதுகாத்தாரோ, அதேபோன்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரும் சட்டம்–ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 23 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. அது மக்களின் உணர்வு பிரச்சினை.

கையகப்படுத்திய நிலங்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 99 நாட்கள் நடந்த போராட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை. 43 நாட்கள் முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்து, அதனை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் துணை முதல்–அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு, 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

மேலும் செய்திகள்