கோட்டூர் மனு நீதி நாள் முகாமில் ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் லதா வழங்கினார்

தேவகோட்டை அருகே கோட்டூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம் மற்றும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் லதா வழங்கினார்.

Update: 2018-06-14 23:19 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் ஊராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் மனு நீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். கலெக்டர் லதா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு 256 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாதம் ஒரு முறை மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் தேவகோட்டை வட்டம், கோட்டூர் ஊராட்சியை தேர்வு செய்து பொது மக்களுக்கு தற்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது நேரடியாக அந்தந்த துறையின் மூலம் வீடுகளுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் பெறப்பட்ட 460 மனுக்களில் சுமார் 256 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.

மேலும் ஊராட்சிகளில் கிராம சேவை மையக் கட்டிடம் கட்டப்பட்டு சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டில் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் நல்ல முறையில் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டுறவுத் துறையின் மூலம் அரை பைசா வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் கடன் வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வரும் நிலையில் கடன்களை திருப்பி செலுத்தி வருவதன் மூலம் மற்ற நபர்களுக்கும் கடன் வழங்க ஒரு வாய்ப்பு ஏற்படும்.

இது போன்ற குறைந்த வட்டி திட்டத்தினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஸ்மார்ட் சிவகங்கா என்ற செயலி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் அனைத்து துறைகளிலும் உள்ள பயன்பாடுகள் குறித்த தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டம் குறித்து இந்த செயலியின் மூலம் அறிந்து பயன் பெறலாம். மேலும் மாணவ- மாணவிகள் விடுதியில் சேருவதற்கு கூட இந்த திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

கோட்டூர் ஊராட்சி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் பாசன கண் மாய்கள் சீரமைத்தல், கோவி சுற்றுச் சுவர் அமைத்தல், கண்மாய்களில் மடைகள் சீரமைத்தல் போன்ற பணிகள் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, தேவகோட்டை துணை சப்-கலெக்டர் ஆஷாஅஜீத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் விஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருப்பதிராஜன், உமா மகேஸ்வரி, தேவகோட்டை தாசில்தார் சிவசம்போ மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்