விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் மீண்டும் எதிர்ப்பு

சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-12 23:03 GMT
ஓமலூர்,

ஓமலூர் அருகே காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுக்கமாட்டோம் என சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 5-ந் தேதி ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுகா அலுவலகங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விவசாயிகள் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கருத்துகேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் விமான நிலைய விரிவாக்கத்திற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது. இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை வருகிற 19-ந்தேதிக்கு பிறகு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்