கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களும், துப்புரவு பணியாளர்களும் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2018-06-12 22:30 GMT
கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களும், துப்புரவு பணியாளர்களும் நேற்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், எங்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும். அரசாணையில் உள்ள குறைந்த பட்ச ஊதியத்தை முழுவதும் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரபாகரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்