விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தனியார் தங்கும் விடுதி உள்பட 3 கட்டிடங்களுக்கு ‘சீல்’
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தனியார் தங்கும் விடுதி உள்பட 3 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதால், ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சிகளிலும், 11 பேரூராட்சிகளிலும், 31 ஊராட்சிகளிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்கவும் மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது, வணிகவளாக கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் உள்ள குழுவிடம் அனுமதி பெற வேண்டும். செங்குத்தான மலைப்பகுதிகளில் வீடு கட்டக்கூடாது.
விவசாய நிலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டக்கூடாது என்று கூறப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளை மீறி கடந்த 1993–ம் ஆண்டுக்கு பின்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது அரசு மற்றும் சென்னை ஐகோர்ட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விதிமுறை மீறிய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால், தற்போது நகராட்சியில் போதிய ஆட்கள் இல்லாததால், கட்டிட உரிமையாளர்களே தங்களது கட்டிடங்களின் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிட பகுதியை அகற்ற சீல் வைக்கும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊட்டி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி நகராட்சி சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 30–க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் மஞ்சனக்கொரை பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டது. ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தனியார் தங்கும் விடுதிக்கு நகராட்சி மூலம் கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து சம்மந்தப்பட்டவர்கள் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மேல்முறையீடு செய்தனர்.
நகராட்சி நிர்வாக ஆணையர் விதிமுறை மீறி கட்டப்பட்ட அந்த தங்கும் விடுதி மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, நேற்று ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் இரண்டாம் மாடிப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஊட்டி கமர்சியல் சாலையில் வணிகவளாகத்துக்கு அனுமதி பெறாமல், வணிக வளாகமாக இயங்கி வந்த கட்டிடத்திற்கும், ஊட்டி அரசு மருத்துவமனை சாலையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருந்த வீட்டுக்கும் ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி உத்தரவின்படி, நகராட்சி கட்டிட ஆய்வாளர்கள் மீனாட்சி, பழனிசாமி ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நோட்டீசுகளை ஒட்டினர்.
இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஊட்டி பகுதியில் வீடுகளுக்கு அனுமதி பெறப்பட்டு, வணிக நிறுவனங்களாக செயல்படும் கட்டிடங்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.