திருப்பூர் குமார்நகர் மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்: 700 மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றத்திற்கான உத்தரவு
திருப்பூர் குமார்நகர் மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு பெயர் மாற்றத்திற்கான முகாம் நடைபெற்றது. இதில் 700 மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றத்திற்கான உத்தரவை மேற்பார்வை பொறியாளர் சண்முகம் வழங்கினார்.
திருப்பூர்,
திருப்பூர் குமார்நகரில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் திருப்பூர் கோட்ட அளவிலான சிறப்பு பெயர் மாற்ற முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட பிரிவு அலுவலகங்களான திருப்பூர் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, ராயபுரம், கொங்குநகர், பிரிட்ஜ்வே காலனி, டவுன்ஹால், பஜார், முதலிபாளையம், பாரதிநகர், நல்லூர், செட்டிபாளையம், பொ.கா.பாளையம் வடக்கு, பொ.கா.பாளையம் தெற்கு, வீரபாண்டி, முருங்கப்பாளையம், கணபதிபாளையம், பெ.பாளையம், இடுவம்பாளையம், அருள்புரம், சின்னக்கரை, கரைப்புதூர், ஊத்துக்குளி நகரம், கிழக்கு, ஊரகம், செங்கப்பள்ளி, ஆர்.வி.இ.நகர், பெருந்தொழுவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள் பெயர் மாற்றம் செய்து கொள்ள வந்திருந்தனர்.
முகாமில் மேற்பார்வை பொறியாளர் அலுவலக செயற்பொறியாளர் சுமதி, திருப்பூர் கோட்ட செயற் பொறியாளர் சந்திரசேகரன், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் கணக்குப்பரிவு அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பெயர் மாற்றுவதற்கான பணிகளை செய்தனர்.
இது குறித்து மேற்பார்வை பொறியாளர் சண்முகம் கூறும் போது, மின்நுகர்வோர்கள் மிக எளிமையான முறையில் சிரமமின்றி நீண்ட நாட்களாக பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ள மின் இணைப்புகளை பெயர் மாற்றம் செய்து கொள்ள இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில் சரியான ஆவணங்களை கொண்டு வந்தவர்களுக்கு உடனடியாக பெயர் மாற்றல் உத்தரவு வழங்கப்பட்டது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற முகாமில் 700 பேருக்கு பெயர் மாற்றத்திற்கான உத்தரவு வழங்கப்பட்டது என்றார்.