அவினாசியில் வீட்டுமனை வரைமுறை செய்ய லஞ்சம் கேட்பதாக கூறி சிறப்பு முகாமில் தர்ணா செய்தவரால் பரபரப்பு
அவினாசியில் வீட்டுமனை வரைமுறை செய்ய லஞ்சம் கேட்பதாக கூறி சிறப்பு முகாமில் தர்ணா செய்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி,
அனுமதியற்ற மனை பிரிவில் மனை வாங்கியோர் மனை வரைமுறைப்படுத்திக்கொள்வதற்கான சிறப்பு முகாம் திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும், அவினாசி சேவூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மனை வரைமுறைபடுத்தியதற்கான ஆணையை வழங்கி அவர் பேசினார்.
அவினாசியில் நடந்த முகாமில் அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 ஊராட்சிகள் (புதுப்பாளையம், கணியாம்பூண்டி தவிர) மற்றும் அவினாசி பேரூராட்சி ஆகிய பகுதிகளை சார்ந்தவர்களுக்காக முகாம் நடத்தப்பட்டது. இதில் திருப்பூரில் நடந்த முகாமில் 300 பேர் விண்ணப்பித்ததில் 150 பேருக்கும், அவினாசியில் 1200 பேர் விண்ணப்பித்ததில் 500 பேருக்கும் வீட்டுமனை வரைமுறை படுத்தப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே அவினாசியில் நடந்த முகாமில் வடுகபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் வந்திருந்தார். அவர் தனது கையில், ‘சட்டப்படி வீட்டுமனையை வரைமுறை செய்ய லஞ்சம் கேட்கும் அவினாசி வட்டார வளர்ச்சி அதிகாரியை கண்டித்து அறவழி போராட்டம்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன், முகாம் நடந்த திருமண மண்டபத்தின் உள்ளே தரையில் உட்கார்ந்து திடீரென தர்ணா செய்தார்.
இதைப்பார்த்த அதிகாரிகள், உடனே அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த முகாம்களில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) மனோகரன், திருப்பூர் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திருமுருகன், உதவி ஆணையர் கண்ணன், தாசில்தார்கள் கோபாலகிருஷ்ணன், வாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.