மந்திரிசபை விரிவாக்கம்: நடிகை ஜெயமாலா உள்பட 25 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர் கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
கர்நாடக சட்ட சபைக்கு கடந்த மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
பெங்களூரு,
கர்நாடக சட்ட சபைக்கு கடந்த மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
குமாரசாமி முதல்-மந்திரியாக...
இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 38 தொகுதியிலும் வெற்றி பெற்றன. பெரிய கட்சியாக பா.ஜனதா வெற்றி பெற்றதால் அக்கட்சியின் ஆட்சிக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி, கர்நாடகத்தில் மலர்ந்தது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்- மந்திரியாகவும் கடந்த மே மாதம் 23-ந் தேதி பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு உடன்பாடுகள் ஏற்பட்டன.
25 மந்திரிகள் பதவி ஏற்றனர்
முதல்-மந்திரி பதவி உள்பட மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் 22 பதவிகள் காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) 12 பதவிகளையும் பகிர்ந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இலாகாக்களையும் இரு கட்சிகளும் சுமுகமாக பகிர்ந்து கொண்டன. முக்கியமாக நிதித்துறை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும், போலீஸ் இலாகா காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து 6-ந் தேதி(அதாவது நேற்று) மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கர்நாடக மந்திரிசபை நேற்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
புதிதாக 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. சரியாக மதியம் 2.21 மணிக்கு தேசிய கீதத்துடன் இந்த விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து புதிய மந்திரிகள் ஒவ்வொருவராக பதவி ஏற்றனர். காங்கிரஸ் சார்பில் 15 பேரும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 10 பேரும் என மொத்தம் 25 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மதியம் 3.21 மணிக்கு இந்த பதவி ஏற்பு விழா நிறைவடைந்தது. புதிய மந்திரிகள் அனைவரும் பதவி ஏற்ற பிறகு, கவர்னர் மற்றும் முதல்-மந்திரியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பகுஜன் சமாஜ்
காங்கிரஸ் சார்பில் டி.கே.சிவக்குமார்(கனகபுரா), ஆர்.வி.தேஷ்பாண்டே (ஹலியாள்), கே.ஜே.ஜார்ஜ் (சர்கவக்ஞநகர்), கிருஷ்ண பைரேகவுடா(பேட்ராயனபுரா), சிவசங்கரரெட்டி(கவுரிபித்தனூர்), ரமேஷ் ஜார்கிகோளி(கோகாக்), பிரியங்க் கார்கே(சித்தாபுரா), யு.டி.காதர்(மங்களூரு), ஜமீர்அகமதுகான்(சாம்ராஜ்பேட்டை), சிவானந்தபட்டீல்(பசவனபாகேவாடி), வெங்கடரமணப்பா(பாவகடா), ராஜசேகர் பட்டீல்(உம்னாபாத்), புட்டரங்கஷெட்டி(சாம்ராஜ்நகர்), சங்கர்(ராணிபென்னூர்), நடிகை ஜெயமாலா(எம்.எல்.சி.) ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இவர்களில் சங்கர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜனதா தளம்(எஸ்) சார்பில் எச்.டி.ரேவண்ணா(ஒலேநரசிபுரா), பண்டப்பா காசம்பூர்(பீதர் தெற்கு), ஜி.டி.தேவேகவுடா(சாமுண்டீஸ்வரி), மனகொளி(சிந்தகி), எஸ்.ஆர். சீனிவாஸ்(குப்பி), வெங்கடராவ் நாடகவுடா(சிந்தனூர்), சி.எஸ்.புட்டராஜூ(மேல்கோட்டை), சா.ரா.மகேஷ் (கே.ஆர்.நகர்), என்.மகேஷ் (கொள்ளேகால்), தம்மண்ணா(மத்தூர்) ஆகியோரும் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இதில் என்.மகேஷ் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர் என்பதும், ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
டி.கே.சிவக்குமார் பட்டு சட்டை-வேட்டி
புதிய மந்திரிகள் அனைவரும் முதல்-மந்திரி குமாரசாமி முன்னிலையில் பதவி ஏற்றனர். புதிய மந்திரிகளுக்கு கவர்னர் மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மந்திரி டி.கே.சிவக்குமார் பட்டு சட்டை, வேட்டி, துண்டு அணிந்து வந்திருந்தார். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜமீர்அகமதுகான் ஆகியோர் கோட்டு சூட்டு அணிந்து வந்திருந்தனர்.
அதே போல் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஜி.டி.தேவேகவுடாவும் பட்டு சட்டை-வேட்டி அணிந்து இருந்தார். சட்டப்படி கர்நாடக சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் 34 பேரை மந்திரிகளாக நியமிக்க முடியும். இதில் தற்போது முதல்-மந்திரி குமாரசாமி உள்பட மொத்தம் 27 பேர் பதவி ஏற்றுள்ளனர். மந்திரிசபையில் இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளன. இதில் கங்கிரசுக்கு 6 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒரு இடமும் உள்ளன.
அகன்ற திரைகள்
இந்த பதவி ஏற்பு விழாவையொட்டி ராஜ்பவனை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அனுமதி சீட்டு இருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பதவி ஏற்பு விழா நடைபெற்றபோது, ராஜ்பவன் ரோட்டில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அந்த சாலையில் இரண்டு அகன்ற எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் புதிய மந்திரிகளின் ஆதரவாளர்கள் பதவி ஏற்பு விழாவை கண்டு மகிழ்ந்தனர். இந்த பதவி ஏற்பு விழாவில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.