சத்தியமங்கலம் அருகே அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அடையாளம் காட்டாவிட்டால் போராட்டம் நடத்துவோம்: முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு
சத்தியமங்கலம் அருகே அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அடையாளம் காட்டா விட்டால் போராட்டம் நடத்துவோம் என்று முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தார்கள்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது கொமராபாளையம். இங்கு குள்ளங்கரடு என்ற பகுதியில் சமீபத்தில் அரசு சார்பில் மாதிரிபள்ளி மற்றும் அரசு கல்வியியல் கல்லூரி புதிதாக கட்டப்பட்டு இயங்கி வருகிறது. மேலும் நீதிமன்ற வளாகமும் கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அரசுக்கு சொந்ாதமான 100 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த இடத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சத்தி, இக்கரைநெகமம் ஊராட்சி, அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு தலா 2 செண்ட் வீதம் ஆயிரம் பேருக்கு விழா நடத்தி பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பட்டா வழங்கியவர்களுக்கு அவரவர் இடம் எது? என்று அடையாளம் காட்டவில்லை.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மக்கள் அரசு அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. இந்தநிலையில் பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் சத்தி தாசில்தார் கிருஷ்ணனிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட பட்டாவுக்கான நிலத்தை வருகிற 20-ந் தேதிக்குள் அடையாளம் காட்டவேண்டும். இல்லை என்றால் பட்டா பெற்ற அனைவரும் குள்ளங்கரடு பகுதியில் குடியேறும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு கூறியுள்ளார்கள்.