மாவட்டத்தில் புதிதாக அணைகள் கட்டி நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய அணைகள் கட்டி நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Update: 2018-06-06 22:45 GMT
கிருஷ்ணகிரி,

தமிழக விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியரெட்டி தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொருளாளர் அசோக்குமார் வரவேற்றார். இதில் மாவட்ட ஆலோசகர் நசீர் அகமது, துணைத் தலைவர் வண்ணப்பா, வேலு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பெருமா, நசீர் அகமது, துணை செயலாளர்கள் வரதராஜ், ஜெயபால், மேற்கு மாவட்ட துணைத்தலைவர் பசவன், சந்திரசேகர், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சங்க மாநில தலைவர் கே.எம். ராமகவுண்டர் கலந்து கொண்டு பேசினார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு செல்லும் வாணி ஒட்டு, அழியாளம், உலகம், அனுமன்தீர்த்தம் அருகில் அணைகள் கட்டிட வேண்டும். மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரம் ஏரிகளுக்கு கால்வாய் வெட்டி நீரை நிரப்ப வேண்டும். மாவட்டத்தில் புதிதாக அணைகள் கட்டி நிலத்தடி நீரை உயர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் விவசாய நில பகுதியில் அமைக்கப்படும் மின் கோபுரத்திற்கு மாத வாடகை ரூ.25 ஆயிரம் கொடுக்க வேண்டும். மின் கம்பிகள் செல்லும் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வாடகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அரசு இலவசமாக அனைத்து வகையான வேளாண்மை கருவிகளையும் வழங்க வேண்டும். விவசாயிகளுக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5-ந் தேதி நடைபெறும் பேரணி, மாநாட்டை இந்த ஆண்டு கிருஷ்ணகிரியில் நடத்துவது, இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்வது, விவசாய விளை பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ரவி, ரங்கநாத், தேவராஜ், தமிழ்வாணன், பைரேசன், சபரி, அனுமந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்