சுற்றுலா தலமான பழவேற்காட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

சுற்றுலா தலமான பழவேற்காட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-06-06 22:45 GMT

பொன்னேரி,

ஆரணிஆறு, சொர்ணமுகி ஆறு, காலங்கிஆறு போன்றவை பழவேற்காடு ஏரியில் பாய்ந்து ஏரியும் கடலும் கலக்கும் இடமான முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது. பழவேற்காடு ஏரியில் 160 வகையான மீன்கள், 25 வகையான மிதவை புழுக்கள், 100 வகையான பறவைகள் காணப்படுகிறது.

ஏரியின் இரு புறங்களிலும் மூச்சுவிடும் வேர்கள் கொண்ட அலயாத்தி மரங்கள் காணப்படுகிறது. இந்த மரங்கள இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலங்களில் புயலின் வேகத்தை கட்டுப்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது.

இங்கு இயற்கையாகவே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. நாரை, வர்ணநாரை, கூழைக்கடா, நத்தைகுத்திநாரை, கடல்காகங்கள், ஆலா, உள்ளான், சிறுவளையபறவை, சாம்பல்நாரை, பெரியவெள்ளை கொக்கு மற்றும் பலவகையான வாத்து இனங்களும் வெளிநாடுகளில் இருந்து வந்து இனப்பெருக்கம் செய்தப்பின் திரும்பி செல்கிறது. லைட்அவுஸ், சிந்தாமணீஸ்வரர் கோவில், டச்சு கல்லறை, மசூதிகள் அமைந்துள்ளன.

இப்படி பழம்பெருமை வாய்த இடத்தை தமிழக அரசு சுற்றுலா தலமாக அறிவித்தது. நீண்ட அழகிய கடற்கரையில் மாவட்ட சுற்றுலா துறையின் மூலம் விழாக்கள் நடந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, இரவுநேர தங்கும் வசதி, உணவு விடுதி, சுற்றுலா குறித்த தகவல் மையம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்