காலா படத்தில் திரவியநாடார் பற்றிய உண்மை நிலையை மறைக்காமல் காட்ட வேண்டும் என்.ஆர்.தனபாலன் பேட்டி

காலா படத்தில் திரவியநாடார் பற்றிய உண்மை நிலையை மறைக்காமல் காட்ட வேண்டும் என கரூரில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறினார்.

Update: 2018-06-06 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கரூர் நகரத்தார் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் கூடலரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.என்.சேகர், மாவட்ட அவை தலைவர் பரமத்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் நிறுவன தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க வேண்டும். அதிகளவில் ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே இதனையும் தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். கோயம்பள்ளி மேம்பால பணியை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ‘நீட்‘ தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், மாவட்ட துணை தலைவர் மோகன், உயர்மட்டக்குழு உறுப்பினர் விஜய் மாரிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக என்.ஆர்.தனபாலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘நீட்‘ தேர்வினால் மருத்துவ கனவு தகர்ந்ததால் பிரதீபா என்கிற மாணவி தற்கொலை செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ‘நீட்‘ தேர்வு தமிழகத்தில் தொடர்ந்து நடந்து ஏழை மாணவ-மாணவிகளை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது. மாநில அரசானது இது பற்றி கவலைப்படாமல் மத்திய அரசின் கைப்பாவையாகவே செயல்படுவது தெளிவாக தெரிகிறது.

தூத்துக்குடி உயிரிழப்பு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும். தூத்துக்குடி சம்பவத்தில் உருட்டு கட்டை, கற்களை வைத்திருந்தவர்கள் போலீஸ் தான். மாறாக போராட்ட மக்களை குற்றம் சாட்டுவது முறையல்ல.

பெட்ரோல் விை-யை ரூ.80-க்கு மேல் உயர்த்தி விட்டு கண்துடைப்புக்காக பைசா கணக்கில் மத்திய அரசு குறைப்பது கண்டனத்துக்கு உரியது. இது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் ஒன்றாக மாற வாய்ப்பிருக்கிறது. காலா திரைப்படத்தில் திரவிய நாடார் வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். அவரது உண்மை நிலையை மறைக்காமல் படத்தில் காட்ட வேண்டும். படம் வெளிவருவதற்கு முன்பே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை கோர்ட்டுக்கு சென்று மீண்டும் திறக்காத வகையில் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்