பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடை பெற்றது.

Update: 2018-06-06 22:45 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொடக்கத்தில் பள்ளி வளாகத்தில் வேப்ப மரக்கன்றை பள்ளியின் முதலாம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நட்டு வைத்தனர். தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை ஜான்சிராணி தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் புதிய பயணம் சார்பாக “நெகிழி பூதம்” எனும் நூல் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் முதல் வகுப்பு மாணவர்களுக்கு பரிசாக நாட்டுக்காய்கறி விதை பொட்டலங்கள் வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய உறுதிமொழியோடு, இயன்ற வகையில் நெகிழியைத் தவிர்ப்போம் எனவும் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

இதேபோல் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இறைவழி பாட்டுக்கூட்டத்தில் அனைவரும் நெகிழி ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இயற்கை தோட்டத்தில் நாட்டு காய்கறி விதைகள் விதைக்கப்பட்டன. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவகாமி, உதவியாசிரியர்கள் முருகராணி, அம்பிகா, செபஸ்தியம்மாள், சத்துணவு அமைப்பாளர் ராஜநிலா, அங்கன்வாடி ஆசிரியர்கள் முத்துலட்சுமி, சந்தியா மற்றும் பெற்றோர்கள், மேலாண்மை குழு உறுப்பினர், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா, விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பை, டீ கப்புகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மைதான வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

இதேபோல் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியிலும் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பள்ளி தலைமையாசிரியர் அறிவழகன் தொடங்கி வைத்தார். இதில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பை வலி யுறுத்தி பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்ந்து மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி ஊர்வலமும் நடந்தது. 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறுவதையும், தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைப்பதால் கிடைக்கும் அரசின் சலுகைகள் குறித்த கோஷங்களோடு ஊர்வலமாக சென்றனர். இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்