வள்ளல் அழகப்பர் வளாகம் பெயரிட முயற்சி மேற்கொள்ளப்படும் துணைவேந்தராக பதவியேற்ற ராஜேந்திரன் தகவல்

அழகப்பா பல்கலைக்கழக வளாக பரப்பளவை குறிக்கும் வகையில் வள்ளல் அழகப்பர் வளாகம் என பெயரிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று துணைவேந்தராக பதவியேற்ற ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-06 21:30 GMT

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 10–வது துணைவேந்தராக பேராசிரியர் ராஜேந்திரன் பதவியேற்றுக்கொண்டார். முன்னதாக அவர் குன்றக்குடி சண்முகநாதன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் ஆசி பெற்றார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தராக பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:– தேசிய அளவில் சிறப்பு பெற்ற அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றக் கூடிய வாய்ப்பை பெற்றதை பெருமையாக கருதுகிறேன். அதே நேரத்தில் தனக்கு வழங்கப்பட்ட பெரும் பொறுப்பை உணர்ந்துள்ளேன். இந்த தார்மீக பொறுப்பு ஒட்டு மொத்த உறுப்பினர்களுக்கும் உள்ளது. கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகிய மூன்றும் பல்கலைக்கழக நடைமுறைகளில் முக்கிய நோக்கமாகும்.

இந்த 3 நோக்கங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியை பொறுத்தே உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி அமைகிறது. எனவே உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பணியை மாணவர்கள் நலன் கருதி சிறப்பாக செய்ய வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் அமைந்துள்ள மைய நூலகங்களில் வெளிப்படையாக தெரியும் வகையிலான போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்கள் படிக்கும் மற்றும் பயிற்சி பெறும் அறை அமைத்திருக்க வேண்டும். இந்த வெளிப்படையான அறையில் படிக்கும் மாணவர்களை பார்க்கும் பிற மாணவர்களுக்கு இது ஒரு உத்வேகத்தை அளிக்கும். இதனால் பல மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ளக்கூடிய வகையில் அமையும்.

அழகப்பா பல்கலைக்கழக மைய நூலகத்தில் அனைத்து வசதியும் செய்யப்படும். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக வளாகத்தை எளிதாக அடையாளம் காட்டும் வகையில் அதற்கு தனி பெயர் சூட்டப்படுவது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் அழகப்பா பல்கலைக்கழக வளாக பரப்பளவை குறிக்கும் வகையில் வள்ளல் அழகப்பர் வளாகம் என பெயரிட முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். பதவியேற்பு விழாவின் போது பல்கலைக்கழக பதிவாளர் குருமல்லேஷ்பிரபு, தேர்வாணையர் சக்திவேல், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நாராயணமூர்த்தி, ஜெயகாந்தன், குருநாதன், சுவாமிநாதன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்