காரைக்குடி பகுதியில் கண்மாய், ஊருணிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
காரைக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக கண்மாய், ஊருணிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
காரைக்குடி,
ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் நிலவும் கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கு அச்சமடைந்து வீட்டிற்குள் முடங்கிபோய் விடுவார்கள். இந்தாண்டு இந்த அக்னி நட்சத்திர வெயில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்தது.
காரைக்குடி, சாக்கோட்டை, பள்ளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து மக்களை குளிரச் செய்தது. இதனால் காரைக்குடி, பள்ளத்தூர், கே.வேலங்குடி, ஆலம்பட்டு, மேலமகாணம் உள்ளிட்ட மாவட்டத்தில் வறண்டு கிடந்த பல்வேறு கண்மாய்கள் மற்றும் ஊருணிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதுதவிர சாலையோரங்கள், வீடுகள், காடு பகுதியில் உள்ள மரங்கள் கடும் வறட்சி காரணமாக பட்டுப்போன நிலையில் இருந்த நிலையில் தற்போது பெய்த மழைக்காரணமாக அந்த மரங்களில் இலைகள் பச்சைப்பசேலென கண்களுக்கு குளுமையாக காட்சி அளிக்கின்றன. ஒரு சில இடங்களில் கண்மாயில் தேங்கிய ஓரளவு தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுகியகால நெல் நடவு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.