மலிவு விலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நாப்கின்கள் மத்திய மந்திரி அனந்தகுமார் வெளியிட்டார்

மலிவு விலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நாப்கின்களை மத்திய மந்திரி அனந்தகுமார் வெளியிட்டார்.

Update: 2018-06-05 21:45 GMT

பெங்களூரு,

மலிவு விலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நாப்கின்களை மத்திய மந்திரி அனந்தகுமார் வெளியிட்டார்.

மண்ணில் கரைந்துவிடும்

மத்திய அரசின் மக்கள் மருந்தக மையம் சார்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சானிட்டரி நாப்கின் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி அனந்தகுமார் கலந்து கொண்டு, அந்த நாப்கினை வெளியிட்டு பேசியதாவது:–

நாட்டில் இதுவரை எந்த நிறுவனமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நாப்கின்களை வெளியிடவில்லை. இத்தகைய நாப்கின்கள் 3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்குள் மண்ணில் கரைந்துவிடும். சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பெரிய நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் 1.13 லட்சம் டன் அளவிலான நாப்கின்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு உகந்த...

இவ்வளவு நாப்கின்கள் மண்ணில் கரைய 500 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. அதனால் இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய நிலைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் நமது மக்கள் மருந்தக மையம் இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த நாப்கின்களை தயாரித்து உள்ளது. இது பாராட்டுக்குரியது.

நாட்டில் மொத்தம் உள்ள பெண்களில் 42 சதவீதம் பேர் மட்டுமே இந்த நாப்கின்களை பயன்படுத்துகிறார். மீதமுள்ள 58 சதவீத பெண்களால் நாப்கினை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கிராமப்புறங்களில் உள்ளவர்கள், குறைந்த வருவாய் உள்ளவர்களின் வசதிக்காக இந்த மலிவு விலையுடைய சுற்றுச்சூழலுக்கு உகந்த நாப்கின்களை அறிமுகம் செய்துள்ளோம். பெண்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ரூ.400 கோடியை தாண்டிவிட்டது

மத்திய அரசு நாடு முழுவதும் 3,606 மக்கள் மருந்தகங்களை தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. இந்த மருந்தகங்களில் வணிகம் ரூ.400 கோடியை தாண்டிவிட்டது. இந்த வணிகத்தை ரூ.10 ஆயிரம் கோடிக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். 4 நாப்கின்கள் அடங்கிய ஒரு பாக்சின் விலை ரூ.10 ஆகும்.

இவ்வாறு அனந்தகுமார் பேசினார்.

மேலும் செய்திகள்