இன்று புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா மின்சாரத்துறையை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க ஜனதா தளம்(எஸ்) முடிவு
புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா இன்று(புதன்கிழமை) நடக்கிறது. 27 மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள்.
பெங்களூரு,
புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா இன்று(புதன்கிழமை) நடக்கிறது. 27 மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள். மின்சாரத்துறையை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க ஜனதா தளம்(எஸ்) முடிவு செய்துள்ளது.
ராஜினாமா செய்தார்கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரிய கட்சியான பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அனுமதி வழங்கினார். எடியூரப்பா முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தது. கடந்த மே மாதம் 23–ந் தேதி குமாரசாமி முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாக நியமிக்கப்பட்டார். மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் காங்கிரஸ் 22 பதவியும், ஜனதா தளம்(எஸ்) 12 பதவியும் பகிர்ந்து கொண்டன. இலாகா ஒதுக்கீடும் நிறைவடைந்துவிட்டது.
27 மந்திரிகள் பதவி ஏற்பார்கள்இந்த நிலையில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா இன்று(புதன்கிழமை) பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் மதியம் 2.12 மணிக்கு நடக்கிறது. இதில் காங்கிரஸ் சார்பில் 18 மந்திரிகளும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 9 மந்திரிகளும் என மொத்தம் 27 மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.
காங்கிரசில் கே.ஜே.ஜார்ஜ், தினேஷ் குண்டுராவ், ஆர்.வி.தேஷ்பாண்டே, சதீஷ் ஜார்கிகோளி, துகாராம், பசவராஜ் பட்டீல் ஹும்னாபாத், டி.கே.சிவக்குமார், லட்சுமி ஹெப்பால்கர், ரூபா சசிதர், எம்.டி.பி.நாகராஜ், சி.எஸ்.சிவள்ளி, பிரதாப் சந்திரஷெட்டி, உமேஷ்ஜாதவ், சாமனூர் சிவசங்கரப்பா, பிரியங்க் கார்கே, சிவசங்கரரெட்டி, பைரதி பசவராஜ், ஜமீர்அகமதுகான் ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், எஸ்.ஆர்.பட்டீல் ஆகியோர் மந்திரி பதவியை பெற முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவருக்கு பதவி கிடைக்கும் என்று தெரிகிறது.
பசவராஜ் ஹொரட்டிஅதேபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் மந்திரி பதவிக்கு பண்டப்பா காசம்பூர், எச்.டி.ரேவண்ணா, ஜி.டி.தேவேகவுடா, எம்.சி.மனகோளி, சி.எஸ்.புட்டராஜூ, எம்.ஆர்.சீனிவாஸ், சீனிவாசகவுடா, வெங்கடராவ் நாடகவுடா, பி.எம்.பாரூக், பசவராஜ் ஹொரட்டி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மகேஷ் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. என்றாலும் இரு கட்சிகளின் சார்பில் எத்தனை மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
காங்கிரஸ் கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கிடைக்காது என்று சொல்லப்படுகிறது. இரு கட்சிகளிலும் எம்.எல்.சி.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். ஆனால் அக்கட்சிகளின் தலைமை, அவர்களுக்கு மந்திரி பதவி வழங்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மந்திரி பதவி கனவில் இருந்த எம்.எல்.சி.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கூட்டணிக்கு சிக்கல்துணை முதல்–மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்தார். குறைந்தபட்சம் தனக்கு மின்சாரத்துறையை ஆவது ஒதுக்க வேண்டும் என்று அவர் கேட்டார். ஆனால் மின்சாரத்துறையை ஜனதா தளம்(எஸ்) பெற்றுக் கொண்டது. அந்த துறையுடன் தனக்கு 2 இலாகாக்கள் ஒதுக்க வேண்டும் என்று தேவேகவுடாவிடம் எச்.டி.ரேவண்ணா வலியுறுத்தி வருகிறார்.
மின்சாரத்துறை கைதப்பி சென்றுவிட்டதால் பலம் வாய்ந்த தலைவரான டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தியை வெளிப்படையாகவே வெளியிட்டார். இது காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது. இதையடுத்து எச்.டி.ரேவண்ணாவை அழைத்து தேவேகவுடா தனது வீட்டில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க...காங்கிரசில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக உள்ள டி.கே.சிவக்குமாருக்கு மின்சாரத்துறையை விட்டுக்கொடுக்குமாறு கூறினார். இதை ஏற்க அவர் மறுத்தார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் எச்.டி.ரேவண்ணா மின்சாரத்துறையை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதைடுத்து டி.கே.சிவக்குமாருக்கு மின்சாரத்துறை கிடைப்பது உறுதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின்பு காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் பதவி கிடைக்காதவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களை சமாதானப்படுத்தவே இரு கட்சிகளும் சில மந்திரி பதவிகளை நிரப்பாமல் காலியாக வைக்க திட்டமிட்டுள்ளன. மந்திரிகள் நியமனத்திற்கு பின் கூட்டணி கட்சிகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை அறுவடை செய்ய பா.ஜனதா தயாராக உள்ளது.
பரபரப்பான மாற்றங்கள்அதிருப்தியை வெளிப்படுத்தும் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் முழு பலத்தின் அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு இன்னும் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
அடுத்தடுத்து வரும் நாட்களில் கர்நாடக அரசியலில் பரபரப்பான மாற்றங்கள் நிகழக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதனால் இந்த கூட்டணி ஆட்சி நிலையாக 5 ஆண்டுகள் இருக்குமா? அல்லது அதற்குள்ளேயே ஆட்டம் கண்டுவிடுமா? என்று போக போக தான் தெரியும்.