நீட் தேர்வில் தோல்வியால் மாணவி தற்கொலை: உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்காமல் அரசு மருத்துவமனையில் போராட்டம், தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் கைது
‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்காமல் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
விழுப்புரம் மாவட்டம் பெருவளுரை சேர்ந்தவர் சண்முகம், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு உமாபிரியா (வயது 22), பிரதீபா (18) ஆகிய 2 மகள்களும், பிரவீன்ராஜ் என்ற மகனும் உள்ளனர்.
‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் பிரதீபா நேற்று முன்தினம் விஷம் குடித்தார். இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் மாணவி பிரதீபாவின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மாணவி பிரதீபா உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது பெற்றோர் ஒப்புதல் அளிக்க மறுத்து கையெழுத்திடவில்லை.
மேலும், உடல் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவமனை முன்பு பிரதீபா உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். பிரதீபா குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பெற்றோரிடம் கையெழுத்து கேட்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மருத்துவமனையின் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் மாணவியின் தந்தை சண்முகம் மற்றும் உறவினர்களிடம் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி தாருங்கள் அரசிடம் சமர்ப்பித்து அதற்கான தீர்வு காண நடவடிக்கை எடுப்போம் என்றனர்.
மேலும் செஞ்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தான் மற்றும் தி.மு.க.வினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்டு கட்சியினர் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் அவர்கள், பிரதீபாவின் குடும்பத்தினருடன் சேர்ந்து மருத்துவமனையின் வளாகத்தின் முன்பு அமர்ந்து மாநில அரசை கண்டித்தும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட கலெக்டர் எங்களிடம் பேச வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் வருகிறோம் என்றனர்.
இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்.
பின்னர் அவர், பிரதீபாவின் தாய், தந்தையிடமும், மஸ்தான் எம்.எல்.ஏ.விடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரதீபாவின் தரப்பினர், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். பிரதீபாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றனர்.
பின்னர் கலெக்டர், இதுசம்பந்தமாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். இதையடுத்து பிரதீபாவின் தாய் அமுதாவிடம் கலெக்டர் பேசினார். சோர்ந்து போய் காணப்பட்ட அவருக்கு தண்ணீர் வழங்கினார். கலெக்டரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதும் பிரதீபாவின் குடும்பத்தினர், பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து கலெக்டரின் பரிந்துரையை ஏற்று அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பிரதீபாவின் குடும்பத்திற்கு ஆதரவாக வந்தவர்களை போலீசார் விரட்டி, விரட்டி பிடித்து வேனில் ஏற்றினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மஸ்தான் எம்.எல்.ஏ. மற்றும் திருவண்ணாமலை தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், இளைஞரணி அமைப்பாளர் அண்ணாதுரை, டாக்டர் எ.வ.வே.கம்பன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அம்பேத் வளவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து பிரதீபாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மதியம் சுமார் 2 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் பிரதீபாவின் உடல் பெரவளூருக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. உள்பட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவங்களினால் திருவண்ணாமலை மருத்துவமனை நேற்று பரபரப்பாக காணப்பட்டது.