சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

சேலத்தில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2018-06-05 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. இதனால் விவசாய கிணறுகள் மற்றும் குளங்களில் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சேலம் மாநகரில் நேற்று காலை வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனிடையே திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 5 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலையிலும், கால்வாய்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை 1½ மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அதன் பின்னர் இரவு வரை மழை தூறிக்கொண்டே இருந்தது.

மழைநீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்தது. இதையடுத்து அவர்கள் தண்ணீரை பாத்திரங்கள் கொண்டு வெளியேற்றினர். இதன் காரணமாக இரவில் பொதுமக்கள் தூங்குவதற்கு சிரமப்பட்டனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். சிலர் மழையில் நனையாமல் இருக்க தலையில் துணிகளை போட்டுக்கொண்டு சென்றனர். சேலம் தமிழ் சங்கம் சாலையில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற மக்கள் சிரமப்பட்டனர். மேலும் மோட்டார் சைக்கிள்கள் ஊர்ந்தவாறு சென்றன.

நகரில் பாதாள சாக்கடை பணி முடிவடையாமல் உள்ள சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கின. இதனால் வாகன ஓட்டிகள் சிலர் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விபத்தில் சிக்கி கொண்டனர். மழையின் காரணமாக இரவில் குளிருடன் கூடிய கால நிலை நிலவியது. 

மேலும் செய்திகள்