வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ரூ.20 லட்சம் மோசடி: தனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்திய 3 வாலிபர்கள் கைது
ராணிப்பேட்டை பகுதியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.20 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய தனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
வாணாபாடியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 39). இவர் ராணிப்பேட்டையில் வெளிநாட்டுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஈஸ்வரனின் உறவினரான வாணாபாடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (28) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். ஆனால் வேலைக்கு அனுப்பவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் கடந்த ஆண்டு ஈஸ்வரன் மீது போலீசில் புகார் கொடுத்தனர். இதில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரன் தற்போது ஜாமீனில் வெளி வந்து தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் செட்டித்தாங்கலை சேர்ந்த ஜானகிராமன் (25), செங்காடு பகுதியை சேர்ந்த ராம்ராஜ் (30), ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் (25) ஆகிய 3 பேர் சுமார் ரூ.20 லட்சத்தை வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக பணம் செலுத்தியுள்ளனர். இதுவரை வேலைக்கு அனுப்பாமல், பணமும் திருப்பி தராமல் நிறுவனம் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜானகிராமன், ராம்ராஜ், ராஜேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் அம்மூர் அருகே இருந்து நிறுவன மேலாளர் சந்தோசை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து சந்தோசின் மனைவி புஷ்பா ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து சந்தோசை போலீசார் மீட்டு, அவரை கடத்திய ஜானகிராமன், ராம்ராஜ், ராஜேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ராணிப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.