நாகர்கோவிலில் கடத்தல் நாடகமாடிய குமாஸ்தா மனைவி கோர்ட்டில் ஆஜர்

நாகர்கோவிலில் வக்கீல் குமாஸ்தா மனைவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவருடைய விருப்பத்தின்பேரில் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Update: 2018-06-05 23:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வடிவீஸ்வரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற ரமேஷ் (வயது 45), வக்கீல் குமாஸ்தாவாக உள்ளார். இவருடைய மனைவி தங்கம் (39).

இந்தநிலையில் கடந்த மாதம் கணவன், மனைவி இருவரும் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்து வீட்டில் இருந்த 33 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் திருட்டுப்போனதாக புகார் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 29-ந் தேதி பார்வதிபுரத்துக்கு சென்ற தங்கம் திடீரென மாயமானார். இதனால் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். அப்போது ரமேசின் செல்போனுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ‘உன் மனைவியை கடத்தி வைத்துள்ளோம். போலீசில் கூறினால் உன் குழந்தைகளையும் கடத்தி விடுவோம்‘ என மிரட்டல் விடுத்தார். இதுபற்றியும் ரமேஷ் போலீசில் புகார் அளித்தார்.

அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் போலீசாரையே அதிர்ச்சி அடையச் செய்தது. எனவே இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணையை தனிப்படை போலீசார் மேற்கொண்டனர். தனிப்படை விசாரணையின் இறுதியில் தங்கத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே தங்கத்தை கண்டுபிடித்தால்தான் உண்மை என்ன? என்பது தெரிய வரும் என்று போலீசார் நம்பினர். அதனால் தங்கத்தை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன் ஆரல்வாய்மொழி பஸ் நிலையத்தில் தங்கம் மீட்கப்பட்டார்.

அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையின் போது, தங்கம் தான் கடத்தப்பட்டதாக செல்போனின் தொழில்நுட்ப உதவியோடு ஆண் போல பேசி தனது கணவரையே நம்ப வைத்து நாடகம் ஆடியது தெரிய வந்தது. இது விசாரணை நடத்திய போலீசாரையும், உறவினர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

தங்கம் நடத்தி வந்த சுய உதவிக்குழு மூலமாக கிடைத்த பணத்தை பலருக்கு கடனாக அளித்ததும், அதை வசூலிக்க இயலாததால் உடனே வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து சுயஉதவிக்குழுவினருக்கு பணம் கொடுத்ததும், ஆனாலும் பணம் போதுமானதாக இல்லாததால் தன் நகைகளை அடகு வைத்ததும், அந்த நகைகளை மீட்க முடியாததால் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடியதாக திட்டமிட்டு புகார் கொடுத்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நேற்று மதியம் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தங்கத்தை ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட்டு முன்னிலையில், தங்கம் தான் கடத்தப்பட்டதாக கூறி நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு, யாருடன் செல்ல விருப்பம் என்று தங்கத்திடம் கேட்டபோது, தனது கணவருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். தங்கத்தின் கணவர் ரமேசும் தன்னுடன் அழைத்துச்செல்ல கோர்ட்டில் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தங்கம் அவருடைய கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் வீட்டுக்கு அழைத்து சென்றார். 

மேலும் செய்திகள்