விருதுநகரில் கடத்தப்பட்ட மில் ஊழியரின் பெண் குழந்தை மீட்பு போலீஸ் விசாரணை

விருதுநகரில் கடத்தப்பட்ட மில் ஊழியரின் 1½ வயது பெண் குழந்தை மீட்கப்பட்டது.

Update: 2018-06-05 23:00 GMT

விருதுநகர்,

விருதுநகர் ஆத்துமேடு பகுதியில் வசிப்பவர் ராஜ் திலக் (வயது 29). இவரது மனைவி கனகவள்ளி. இவர்களுக்கு 1½ வயதில் ராசினி என்ற பெண் குழந்தை உள்ளது. ராஜ்திலக் அல்லம்பட்டியில் உள்ள சண்முகக்கனி என்பவருடைய பருப்பு மில்லில் வேலை பார்த்து வருகிறார். இதே மில்லில் வெங்கடேஷ் என்பவரும் சில மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். சென்னையில் வசித்து வந்த வெங்கடேஷ் சில மாதங்களுக்கு முன்புதான் குடும்பத்துடன் விருதுநகர் வந்துள்ளார். அவரும் ஆத்துமேடு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மில்லில் பருப்பு மூடைகள் மாயமாயின. இதற்கு வெங்கடேஷ் தான் காரணம் என மில் உரிமையாளரிடம் ராஜ்திலக் புகார் கூறினார். இதையடுத்து வெங்கடேஷ் பணிநீக்கம் செய்யப்பட்டார். வேலை இழந்த வெங்கடேஷ் மில் உரிமையாளர் சண்முகக்கனி, ராஜ் திலக் ஆகிய இருவர் மீதும் ஆத்திரத்தில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் 2 பேர் ராஜ்திலக் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் வெங்கடேஷ் அழைத்து வரச்சொன்னதாக கூறி ராஜ்திலக்கை அழைத்துச்சென்றுள்ளனர். பை–பாஸ் ரோட்டுப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு ராஜ்திலக்கை அழைத்துச்சென்ற அந்த இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பருப்பு மில் உரிமையாளர் சண்முகக்கனியின் குழந்தையை கடத்த உதவ வேண்டும் என கூறியுள்ளனர். ராஜ்திலக் இதற்கு மறுக்கவே, உனது குழந்தையை முதலில் இங்கு கொண்டுவா என ராஜ்திலக்கை தொடர்ந்து மிரட்டினர். ராஜ் திலக் வெங்கடேசை செல்போனில் அழைத்தார். வெங்கடேசும் அந்த பகுதிக்கு உடனே வந்து விட்டார்.

ராஜ்திலக் வீட்டிலில் இருந்த தனது மனைவியை தொடர்பு கொண்டு குழந்தை ராசினியை ஆதார் அட்டை போட்டோ எடுப்பதற்காக வெங்கடேசிடம் கொடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். கனக வள்ளியும் இதை நம்பி ஏற்கனவே அறிமுகமான வெங்கடேசிடம் குழந்தை ராசினியை கொடுத்து அனுப்பினார். வெங்கடேஷ் ராசினியை கொண்டு வந்ததும் அந்த 2 நபர்களும் குழந்தை ராசினியை கடத்திச் செல்கிறோம் என்றும், மில் உரிமையாளர் சண்முகக்கனியின் குழந்தையை கொண்டுவந்தால் குழந்தை ராசினியை விட்டுவிடுவதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜ்திலக், வெங்கடேஷ் வீடு திரும்பினர். வீட்டுக்கு திரும்பிய ராஜ்திலக் இச்சம்பவம் பற்றி மனைவியிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் ராஜ் திலக்கிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டிலிருந்த வெங்கடேசை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து முறைப்படி விசாரித்த போது குழந்தை கடத்தப்பட்டது தெரிய வந்தது. மில் உரிமையாளர் சண்முகக்கனி மற்றும் ராஜ்திலக் ஆகியோரை பழி தீர்க்கவே வெங்கடேஷ் குழந்தைகளை கடத்த திட்டமிட்டது தெரிய வந்தது

தொடர்ந்து விசாரணை நடத்தியதில், வெங்கடேஷ் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் பிரபு, அசோக் ஆகிய இருவரையும் தனது திட்டத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதும், அதன் பேரில் அவர்கள் இருவரும் விருதுநகருக்கு வந்து ராஜ்திலக் குழந்தை ராசினியை கடத்திச்சென்று பை–பாஸ் ரோடு அருகில் உள்ள கல்குவாரியில் விட்டுவிட்டு சென்று விட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து மதியம் 1 மணியளவில் போலீசார் அந்த கல்குவாரிக்கு சென்று அங்கு அழுது கொண்டிருந்த குழந்தை ராசினியை மீட்டனர். கடத்திச்சென்ற 2 பேரும் குழந்தை ராசினிக்கு திண்பண்டங்களையும், பரோட்டாவையும் வாங்கி கொடுத்துவிட்டு சென்னை சென்றுவிட்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து விருதுநகர் கிழக்கு போலீசார் பிரபு, அஷோக்குமார் ஆகிய இருவரையும் பிடிப்பதற்காக வெங்கடேசுடன் சென்னை விரைந்துள்ளனர். ராஜ்திலக்கின் மனைவி கனகவள்ளியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்