“பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்” கலெக்டர் சிவஞானம்
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் சிவஞானம் கூறினார்.
விருதுநகர்,
உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மாசுபாடுகளை முறியடிப்போம் என்பதை கருப்பொருளாக கொண்டு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற மாணவ–மாணவிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிவஞானம் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:–
உலக சுற்றுச்சூழல் தினம், ஐக்கிய நாடுகள் சபையால் பூமியையும், அதன் இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டை பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த 10 ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத்தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.
சுற்றுச்சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதாகும். பெருகிவரும் மக்கள் தொகையாலும், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வாகன புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பருவகால மாற்றம் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை உணர்த்துகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் நடுவது, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, இயற்கை விவசாய முறைகளை கையாளுதல் உள்ளிட்டவை முக்கியமானது. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சுற்றுச்சூழல் தின உறுதிமொழியை கலெக்டர் சிவஞானம் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ–மாணவிகள் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் விஜயலட்சுமி, உதவி பொறியாளர்கள் சந்திரசேகர், கணேஷ், மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.