ஆசிரியர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடத்த வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடத்த வேண்டும் என்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலாவிடம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
நெல்லை,
ஆசிரியர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடத்த வேண்டும் என்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலாவிடம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
முதன்மை கல்வி அலுவலரிடம் மனு
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் செய்யது இப்ராகிம் மூஷா, மாநில துணை தலைவர் லாசர், மாவட்ட பொருளாளர் துரை, மாநில செயற்குழு உறுப்பினர் மருது பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக வந்தனர். அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
குறைதீர்க்கும் முகாம்
ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தீர்வு காணும் வகையில், மாவட்ட அளவில் குறைதீர்க்கும் முகாம் நடத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும், பள்ளி கல்வித்துறை நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, தென்காசி ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. தற்போது கூடுதலாக சங்கரன்கோவில், வள்ளியூர் ஆகிய புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நிர்வாக அதிகாரம் பிரித்து வழங்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட கல்வி மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளை தீர்வு காண்பதற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.