‘ஆயுள் தண்டனை கைதியின் சாவுக்கு போலீசாரே காரணம்’ மனித உரிமை ஆணையத்திடம் வாலிபர் திடுக் தகவல்

எங்களை போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து தாக்கினர் என்றும் மனித உரிமை ஆணையத்திடம் கொடுத்துள்ள மனுவில் வாலிபர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

Update: 2018-06-05 21:30 GMT
தூத்துக்குடி, 

ஆயுள் தண்டனை கைதியின் சாவுக்கு போலீசாரே காரணம் என்றும், எங்களை போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து தாக்கினர் என்றும் மனித உரிமை ஆணையத்திடம் கொடுத்துள்ள மனுவில் வாலிபர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமை ஆணையத்திடம் மனு

தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையத்தில், தூத்துக்குடி தபால் தந்தி காலனி மக்கள் நல மன்றம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் 2 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் அரசு பணியில் உள்ளவர்கள். ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எங்கள் பகுதி மக்கள் சார்பில் அறவழியில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. எந்த வன்முறையிலும் எங்கள் பகுதி மக்கள் ஈடுபடவில்லை. ஆனால் கடந்த 31-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு எங்கள் பகுதியில் உள்ள பாத்திமா அசோக் என்பவர் வீட்டுக்குள் 20-க்கும் மேற்பட்ட போலீசார் நுழைந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த அவரது சகோதரன் சூசை அந்தோணி அங்கு சென்றார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். மாவட்ட கலெக்டரிடம் குடும்பத்தினர் கேட்டு கொண்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அதேபோல் கடந்த 1-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு எங்கள் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போலீசார் இளைஞர்களை தேடி அலைந்தனர். இதனால் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே எங்கள் பகுதியில் காவல்துறையின் அத்துமீறலை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கைதி

தூத்துக்குடி அண்ணாநகர் 12-வது தெருவை சேர்ந்த செல்வசவுந்தர் (வயது 24) என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது;-

என்னுடைய சித்தப்பா பாரத் என்ற பாரதிராஜா கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வந்தார். எனது வீட்டில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் 17-ந்தேதி பரோலில் வீட்டுக்கு வந்தார்.

கடந்த 23-ந்தேதி மதியம் எனது வீட்டுக்கு வந்த போலீசார் என்னையும், என்னுடைய சித்தப்பாவையும் அடித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அடைத்து வைத்து எங்களை போன்ற 50-க்கும் மேற்பட்டவர்களை கடுமையாக தாக்கினார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி எங்கள் காயத்துக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். ஆனால் போலீசார் எங்களை நேராக பேரூரணி சிறையில் அடைத்தனர்.

போலீசாரே காரணம்

கடந்த 25-ந்தேதி என் சித்தப்பாவின் பரோல் முடிந்ததால் போலீசார் எனது சித்தப்பாவை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். அப்போது என் சித்தப்பாவால் நடக்க கூட முடியவில்லை. இந்த நிலையில் என் சித்தப்பா கடந்த 30-ந்தேதி சிறையில் இறந்ததாக சிறை காவலர்கள் தெரிவித்தனர். நான் எனது சித்தப்பா உடலை பார்த்தேன். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த காயங்கள் அனைத்தும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் என்னுடைய சித்தப்பாவை போலீசார் தாக்கியதே. இதனால்தான் என்னுடைய சித்தப்பா இறந்துள்ளார். என் சித்தப்பாவின் மரணத்துக்கு போலீசாரே காரணம்.

என்னுடைய சித்தப்பாவை தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலாயுதம், நம்பிராஜன் மற்றும் சிகிச்சை அளிக்க தவறிய சிறைத்துறை அதிகாரிகள் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து எங்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்