புளிய மரத்தில் சரக்கு வேன் மோதி வாலிபர் பலி டிரைவர் படுகாயம்

கரூர்-மணப்பாறை சாலையில் தரகம்பட்டி அருகே உள்ள குஜிலியம்பாறை பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

Update: 2018-06-05 22:30 GMT
தரகம்பட்டி,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை சேர்ந்த சண்முகம் மகன் கணேசன்(வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் நல்லப்பார்த்தான் மகன் கார்த்திக்(23). இவர்கள் 2 பேரும் சரக்கு வேனில் சென்று கரூர் பகுதியில் உள்ள கறிக்கோழி கடையில் பிராய்லர் கோழிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து விராலிமலை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். வேனை கார்த்திக் ஓட்டினார். கரூர்-மணப்பாறை சாலையில் தரகம்பட்டி அருகே உள்ள குஜிலியம்பாறை பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கார்த்திக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள புளியமரம் சாலையையொட்டியே உள்ளதால் கடந்த ஆண்டு மட்டும் இந்த புளியமரத்தில் 3 வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த புளியமரத்தை அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றப்படவில்லை. இனியாவது சம்பவம் நடந்த இடத்தில் உள்ள புளிய மரத்தினை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்