ராமேசுவரம் கோவிலில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் குழு ஆய்வு
ராமேசுவரம் கோவிலின் பாதுகாப்பு பணிகளை தேசிய பாதுகாப்புபடை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். கோவிலின் அனைத்து பகுதிகளையும் கேமரா மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்து வருவதால், பக்தர்கள் கிழக்கு, மேற்கு கோபுர வாசல் பகுதியில் அனுமதிக்கப்பட்டு அவர்களையும், அவர்கள் கொண்டு வரும் உடைமைகளையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்த பின்பு தான் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
கோவில் அடைக்கப்பட்ட பின்பும் இரவு பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கோவிலுக்குள்ளேயும் கோவிலின் 4 ரத வீதிகளிலும் காவல் துறை மற்றும் திருக்கோவில் சார்பில் 100–க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் அனைத்து செயல் பாடுகளும் முழுமையாக கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு எல்.சி.டி.டி.வியில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று தேசிய பாதுகாப்பு படை கமாண்டர் ஜெகந்நாதன் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவிலின் கிழக்கு, மேற்குவாசல் நுழைவு பகுதியில் போலீசார் பக்தர்களை சோதனை செய்வதை பார்வையிட்டனர். பின்னர் பிரசித்தி பெற்ற 3–ஆம் பிரகாரம், தீர்த்த பிரகாரமான 2–ஆம் பிரகாரம் உள்ளிட்ட கோவிலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிர ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கோவிலின் மேல்தளத்திற்கு சென்ற தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் குழு, 4 கோபுரங்கள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, கோவிலின் அனைத்து இடங்களையும் தங்கள் கேமரா மூலம் புகைப் படம் எடுத்துக் கொண்டனர். மேலும் கோவிலின் முழுத்தோற்ற வரை படத்தை கேட்டு பெற்று கொண்டதும், கோவிலின் உள்பகுதி மற்றும் ரதவீதிகளில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேல வாசல் பிரகாரத்தில் உள்ள கடைகளின் எண்ணிக்கை, ஆகியவற்றையும் திருக்கோவில் நிர்வாகத்திடம் கேட்டு பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து கோவிலின் மதில் சுவர்களை மறைத்து கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு சொந்தமான மற்றும் தனியார் கட்டிடங்களை பார்வையிட்டதுடன் தங்களது கேமரா மூலமும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆபத்துகாலங்களில் ஹெலிகாப்டரை கோவிலின் மேல்தளத்தில் பறக்க விட்டு கயிறு மூலம் ஏறி, இறங்கும் வகையில் சமதளமாக உள்ளதா, அருகில் தீயணைப்பு நிலையம் உள்ளதா போன்ற தகவல்களையும் கேட்டறிந்து கொண்டனர்.
இதில் கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், காவல் நிலைய ஆய்வாளர் திலகரணி உடனிருந்தனர். முன்னதாக கோவிலின் இணை ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.