திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரிக்கும் செல்போன் வழிப்பறி

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதால், ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-06-05 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகருக்குட்பட்ட பஸ்நிலைய பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. ஆனால் தற்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதிலும் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் ரெயில் நிலையம் அருகே, கோர்ட்டு ரோடும் ஊத்துக்குளி ரோடும் சந்திக்கும் இடத்தில் உள்ள மேம்பாலம், வாலிபாளையம், நொய்யலாற்றின் ஓரம், மின்மயானம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்ம நபர்கள் சிலர் செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் அவலம் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பயத்துடனேயே நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர் கதையாகி வருவதால் இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும், பாதிக்கப்பட்டவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். தொழில் நகரம் என்பதால் ரெயில் நிலையம் மற்றும் பஸ்நிலையங்களில் இருந்து வரும் பயணிகளும், தொழில் நிறுவனங்களில் இருந்து பணிகளை முடித்து கொண்டு வரும் தொழிலாளர்கள் என இரவு மற்றும் பகல் நேரங்களிலும் குறைந்த அளவிலான பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இவர்களை குறி வைத்து திருப்பூரில் உள்ள சில வழிப்பறி திருடர்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றி கொண்டே வருகின்றனர். ரோட்டில் செல்போன் பேசியபடியோ, உபயோகித்தபடியோ அல்லது செல்போனை கையில் வைத்தபடி யாராவது நடந்து சென்றால், இருசக்கர வானத்தில் வரும் இந்த மர்ம நபர்கள் எதிர்பாராத விதமாக திடீரென செல்போனை அவர்கள் கைகளில் இருந்து பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து மறைந்து விடுகின்றனர். செல்போனை பறிகொடுத்தவர்களால் திருடன், திருடன் என்று சத்தம் போட மட்டுமே முடிகிறது.

இவர்கள் சத்தம்போட்டு முடிப்பதற்குள் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று விடுகின்றனர். தினந்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் செல்போனை பறிகொடுத்த ஒரு சிலரே போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கிறார்கள். ஆனால் பலர் போலீஸ் நிலையத்திற்கு சென்றால் சிரமங்கள் ஏற்படும் என்பதால் புலம்பியபடியே அங்கிருந்து சென்று விடுகின்றனர். இது வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இதனால் போலீசார் காலை மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக சுழற்சி முறையில் போலீசார் இந்த பணியில் ஈடுபட நடவடிக்கை எடுத்து, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்