மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் சாவு

பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-06-05 21:45 GMT
பெரியபாளையம்,

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் சத்தியவேடு தாலுகா மதனச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 20). இவர் கடந்த வாரம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கினார்.

இதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான கார்த்திக் (20), தினேஷ் (25) ஆகியோரை அழைத்து கொண்டு நேற்று தனது மோட்டார் சைக்கிளில் செங்குன்றத்தில் உள்ள உறவினரை பார்க்க சிலம்பரசன் சென்றார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே சென்னை-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் கன்னிகைபேர் கிராமம் மின்வாரியம் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளும்-குஜராத் மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரியும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு-நேர் மோதிக்கொண்டது.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் கிராம மக்கள் உடனடியாக மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர்களான கார்த்திக், தினேஷ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்