தினம் ஒரு தகவல் : குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம்

குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டு தோறும் 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2018-06-05 09:29 GMT
குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் டபிள்யூஎச்ஓ யுனிசெப் சார்பில் 10 அம்ச புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டன.

குழந்தைக்கு பால் ஊட்டுவதற்காக தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும், மருத்துவமனைகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா எச் போர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியம். குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டினால் நோய் தொற்றுகளில் இருந்தும், உயிரிழப்பில் இருந்தும் பாதுகாக்கலாம். தாய்ப்பால் ஊட்டாமல் விட்டுவிட்டாலோ அல்லது குறைவான காலத்துக்கு தாய்ப்பால் ஊட்டினாலோ, வயிற்றுப்போக்கு மற்றும் இதர நோய் தொற்றுகள் காரணமாக பச்சிளங் குழந்தைகள் உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

உலகம் முழுவதும் சரியாக தாய்ப்பால் ஊட்டாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றன. எனவே, பிறந்தது முதல் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டுக்கு 5 வயதுக்கு உட்பட்ட 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்க முடியும். தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தையின் கவனம், அறிவுத்திறன் மேம்படும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய் வருவதை தடுக்க முடியும்.

இதன் மூலம் தனிப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் சுகாதாரத்துக்காக ஒதுக்கும் செலவு கணிசமாக குறையும். எனவே, தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிப்பதும், ஆதரிப்பதும் அவசியமாகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நமக்கு குழந்தை பிறப்பது எவ்வளவு பாக்கியம் என்று நினைக்கிறோமோ, அதே போல் தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட, தாய் கிடைப்பதும். நம் நாட்டில் பல குழந்தைகள் தாயின்றி, காப்பகத்தில் காப்பாளர்களின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்