தனியார் கூட்டுறவு வங்கியின் இணையதளத்தை முடக்கி ரூ.95 லட்சம் சுருட்டல்: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தனியார் கூட்டுறவு வங்கியின் இணையதளத்தை முடக்கி ரூ.95 லட்சத்தை சுருட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் தனியாருக்கு சொந்தமான கூட்டுறவு வங்கி உள்ளது. அங்கு தலைமை நிர்வாக அதிகாரியாக அனுமந்தராய் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில், கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான இணையதளத்தை மர்மநபர்கள் முடக்கினார்கள். பின்னர் கூட்டுறவு வங்கியின் கணக்கில் இருந்த ரூ.95 லட்சத்தை மர்மநபர்கள் சுருட்டி விட்டார்கள்.
அதாவது அந்த வங்கி கணக்கில் இருந்து ரூ.50 லட்சத்தை உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரு நிறுவனத்திற்கும், மீதி ரூ.45 லட்சத்தை மற்றொரு தனியார் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வேறு ஒரு தனியார் நிறுவனத்திற்கும் ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்து, ரூ.95 லட்சத்தையும் மர்மநபர்கள் சுருட்டி இருந்தார்கள்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அனுமந்தராய் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.