பெலகாவி அருகே அரசு பள்ளிக்கு தீவைப்பு; பொருட்கள் எரிந்து நாசம்
பெலகாவி அருகே அரசு பள்ளிக்கு தீவைக்கப்பட்டதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. காதல் தோல்வியால் வாலிபர் தீ வைத்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு,
பெலகாவி மாவட்டம் அதானி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தாம்வசி கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. நேற்று அதிகாலையில் அந்த பள்ளியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் பரவியது. மேலும் பள்ளியில் உள்ள சமையல் அறைக்கும் தீ பரவி எரிந்தது. இதனை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர் சம்பவ இடத்திற்கு அதானி போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தார்கள். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தார்கள்.
ஆனாலும் பள்ளியில் இருந்த பாட புத்தகங்கள், முக்கிய ஆவணங்கள், மேஜை, நாற்காலிகள், சமையல் அறையில் இருந்த உணவு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுபற்றி அறிந்ததும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பள்ளியில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானதால், நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. முதலில் மின்கசிவு காரணமாக பள்ளியில் தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதற்கிடையில், அந்த பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையின் கரும்பலகையில் உமேஷ் என்ற வாலிபரின் பெயரில் தீ விபத்து பற்றி எழுதப்பட்டு இருந்தது. அதாவது நான் ஒரு பெண்ணை காதலித்தேன், அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை, எனது காதல் தோல்வி அடைந்தது, என் காதல் தோல்வி அடைவதற்கு இந்த பள்ளியே முக்கிய காரணம், அதனால் பள்ளிக்கு தீவைப்பதாக எழுதப்பட்டு இருந்தது. இதனால் காதல் தோல்வியால் உமேஷ் என்பவர் தான் பள்ளிக்கு தீவைத்தாரா? அல்லது அவரது பெயரை பயன்படுத்தி வேறு எந்த மர்மநபர்களும் தீவைத்தார்களா? என்பது தெரியவில்லை.
ஆனால் பள்ளிக்கு தீவைக்கப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உமேஷ் என்பவர் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் அதானியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.