மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் சாராயம் விற்ற 6 பேர் கைது 660 லிட்டர் சாராயம் பறிமுதல்

மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் சாராயம் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 660 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-06-04 22:15 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே கிளியனூர் குளத்துமேட்டு தெரு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக பெரம்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 31) என்பவர் சாராயம் விற்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமியை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சாராயம் விற்ற அரிவேளூர் நடுத்தெருவை சேர்ந்த முரளிமாறன் (38), அகரகீரங்குடி கிராமத்தில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் சார்லஸ் (25) ஆகியோரை பெரம்பூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறையை அடுத்த மாந்தை பஸ் நிறுத்தம் அருகே சாராயம் விற்றதாக குடவாசல் தாலுகா செருதாலகுடி கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்த சத்தியநாதன் மகன் சத்தியசீலன் (28) என்பவரையும், பாலையூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

திருமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த மோகன் மகன் அமர்நாத் (22) என்பவரையும் பாலையூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குத்தாலத்தை அடுத்த திருவாலங்காடு பஸ் நிறுத்தம் அருகே சாராயம் விற்ற திருவாலங்காடு காவிரி நகரை சேர்ந்த சுகுமார் (56) என்பவரை குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வைத்து இருந்த 110 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்