பட்டா வழங்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மங்கலம் அருகே பட்டா வழங்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-04 21:45 GMT

மங்கலம்,

மங்கலத்தை அடுத்த சின்னப்புத்தூரில் ஆதி திராவிடர் காலனி உள்ளது. இங்கு 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதன்படி ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் சின்னப்புத்தூர் ஏ.டி.காலனி அருகே தனியாருக்கு சொந்தமான 2.90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

பின்னர் அந்த நிலத்தை பிரித்து அந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து நிலத்தின் உரிமையாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த நிலத்தை சுத்தப்படுத்தி பூமி பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதை தெரிந்து கொண்ட சின்னப்புத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சின்னப்புத்தூர் பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். பின்னர் பட்டா வழங்கிய நிலத்தை மீட்டுத்தரக்கோரி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் சமாதானம் அடையாத பொதுமக்கள் அந்த நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் வரும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினார்கள்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி கலாராணி சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினார்கள். அப்போது இந்த நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை தொடர்பாக ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தாரிடம் மனு கொடுக்குமாறும், மேலும் நிலம் தொடர்பான ஆவணங்களை எடுத்துக்கொண்டு இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கூறினார்.

மேலும் செய்திகள்