நண்பர்களுடன் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கிய மாணவன் பிணமாக மீட்பு, உறவினர்கள் சாலைமறியல்
திருப்பூரில் நண்பர்களுடன் ஓடையில் குளிக்க சென்ற போது, தண்ணீரில் மூழ்கிய மாணவன் பிணமாக மீட்கப்பட்டான். அந்த ஓடையை மூட வேண்டும் என்று கூறி உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அங்கேரிபாளையம் ஏ.டி.காலனியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் அசோக் (வயது 11). இவன் அங்கேரிபாளையம் அரசு பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த அசோக், தனது நண்பர்களுடன் செட்டிபாளையம் சாலையில் உள்ள ஒரு ஓடைக்கு சென்றான்.
அங்கு தனது நண்பர்கள் குளிப்பதை பார்த்த அசோக்கிற்கும் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனால் அவனும் தண்ணீரில் இறங்கி குளித்தான். அப்போது, அங்கிருந்த சேற்றில் சிக்கிய அசோக் தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்த அவனுடைய நண்பர்கள், அருகில் இருந்தவர்களிடம் கூறி தனது நண்பனை காப்பாற்றும்படி கூறினார்கள்.
உடனே இதுபற்றி திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரில் இறங்கி அசோக்கின் உடலை தேடினார்கள். ஆனால் நேற்று முன்தினம் இரவு வரை தேடியும் உடல் கிடைக்காததால் தேடும் பணியை கைவிட்டு திரும்பி சென்றனர்.
பின்னர் நேற்று காலை மீண்டும் அசோக்கின் உடலை தேடும்பணி தொடங்கியது. அப்போது, ஓடையில் உள்ள பாறைக்கு நடுவில் அவனுடைய உடல் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அசோக்கை பிணமாக மீட்டனர். இதைதொடர்ந்து அனுப்பர்பாளையம் போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் மாணவன் அசோக் தண்ணீரில் மூழ்கி இறந்த ஓடையை உடடினயாக மூடக்கோரி மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனுப்பர்பாளையம்–அங்கேரிபாளையம் சாலையில் நேற்று மாலை திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம், அனுப்பர்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், முன்னாள் கவுன்சிலர் மாரப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் காளியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது சம்பந்தப்பட்ட ஓடையை உடனடியாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைவைத்தனர். அவர்களிடம் பேசிய தாசில்தார் ஓடையை மூடினால் நிலத்தடிநீர் பாதிக்கப்படும். எனவே பாதுகாப்பு காரணம் கருதி 15 நாட்களுக்குள் ஓடையை சுற்றி கம்பி வேலி அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.