தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட 45 பேர் கைது

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட 45 பேர் போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-04 22:00 GMT

மதுரை,

தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரியும், அரசு பள்ளிகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தல்லாகுளம் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கோபிநாதன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சசிகலா உள்ளிட்ட 45–க்கும் மேற்பட்டவர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்