திருக்கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்த முடிவு

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-06-04 21:30 GMT

ராமேசுவரம்,

தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7–வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கவும், காலி பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யவும், ஊதிய முரண்பாடுகளை அகற்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு போராட்டங்களில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் தமிழகம் முழுவதும் 3 கட்ட அறவழிப்போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதன்படி நாளை (புதன்கிழமை) மண்டல இணை ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் பணியாளர்கள் சார்பில் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் முனியசாமி, பொருளாளர் கலைச்செல்வன், துணை தலைவர் ராமமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமநாதன், ககாரின்ராஜ் உள்பட 30–க்கும் மேற்பட்டவர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர்.

மேலும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற 21–ந்தேதி சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தவும், அதனை தொடர்ந்து 27–ந்தேதி முதல் அனைத்து கோவில்களிலும் தொடர் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக சங்க தலைவர் அண்ணாதுரை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்