கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். 35 ஆண்டுகளாக தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு கால ஊதியம் பெற்று வருகிற சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் நிர்ணயம் செய்துள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவைத்தொகை 21 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பானுமதி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், சுந்தரமூர்த்தி, நடராஜன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஜனார்த்தனன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ரெங்கசாமி, உணவு பாதுகாப்புத்துறை மாநில பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் தண்டபாணியிடம் கொடுத்தனர்.