திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற பெண்

கந்துவட்டி கொடுமையால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-04 23:30 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் தீவிர சோதனைக்கு பிறகு மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர்.

இந்தநிலையில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பெண் ஒருவர் திடீரென தன்னுடைய உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் நின்ற ஆண் ஒருவர், அந்த பெண் மீது தீயை பற்ற வைக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் ஓடிச்சென்று அவருடைய கையில் இருந்த தீக்குச்சியை தட்டிவிட்டனர். பின்னர் அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றினர்.

இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வடமதுரை அருகே உள்ள இ.பி. காலனியை சேர்ந்த டெய்சிராணி (வயது 38) என்பதும், உடன் வந்தவர் அவருடைய கணவர் சேகர் என்பதும் தெரியவந்தது. தீக்குளிக்க முயன்றது குறித்து அந்த பெண் கூறும் போது, என்னுடைய கணவரின் தம்பியான தேவராஜ் எங்களிடம் பணம் கேட்டார். இதனால் எங்கள் வீட்டை ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ.10 லட்சம் பெற்று அவரிடம் கொடுத்தோம்.

இந்தநிலையில் ரூ.25 லட்சம் வட்டி தந்தால் தான் வீட்டின் பத்திரத்தை தருவதாக கடன் கொடுத்தவர் மிரட்டுகிறார். இதுகுறித்து எனது கணவரின் தம்பியிடம் கூறினால், அவர் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கந்துவட்டி கேட்டு மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்