உறவினர் வீட்டு திருமணத்துக்கு வந்த தமிழக ஆசிரியையை காரில் கடத்தி நகைப்பறிப்பு 3 வாலிபர்கள் கைது

உறவினர் வீட்டுக்கு திருமணத்துக்கு வந்த தமிழக ஆசிரியையை காரில் கடத்தி நகை பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-03 22:37 GMT
மும்பை, 

உறவினர் வீட்டுக்கு திருமணத்துக்கு வந்த தமிழக ஆசிரியையை காரில் கடத்தி நகை பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தவறிய அழைப்பால் அறிமுகம்

தமிழகத்தை சேர்ந்த 27 வயது ஆசிரியை ஒருவரின் செல்போனுக்கு கடந்த ஆண்டு தவறிய அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஆசிரியை தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த அழைப்பை விடுத்தது மும்பை காந்திவிலியை சேர்ந்த பிரபாகரன்(வயது28) என்ற தமிழ் வாலிபர் என்பது தெரியவந்தது.

பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஆசிரியை உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மும்பை வந்திருக்கிறார்.

இதை அறிந்த பிரபாகரன் ஆசிரியையை நேரில் சந்தித்து பேசினார்.

நகைப்பறிப்பு

இந்தநிலையில் ஆசிரியையை பிரபாகரன் தனது நண்பர்களான இசக்கியப்பன்(33) கிருஷ்ணன்(23) ஆகியோருடன் கார் ஒன்றில் சி.எஸ்.எம்.டி. நோக்கி அழைத்து சென்று இருக்கிறார்.

கார் வாடிபந்தர் பகுதியில் வந்தபோது, ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு, பிரபாகரன் இறங்கி சென்றுவிட்டார். இந்தநிலையில், காரில் இருந்த இருவரும் ஆசிரியையை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்து உள்ளனர். பின்னர் அவர்கள் ஆசிரியையை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

3 பேர் கைது

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இது குறித்து ஆர்.ஏ.கே.மார்க் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ஆசிரியையை காரில் கடத்தி நகையை பறித்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், பிரபாகரன் சதி திட்டத்தின் பேரில் தான் ஆசிரியையிடம் நகைபறித்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரன் உள்பட 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப் பட்டனர்.

விசாரணையில், அவர்கள் ஆசிரியையிடம் பறித்த நகையை ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்று பணத்தை பங்கு போட்டுக்கொண்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்