98 சதவீத அ.தி.மு.க.வினர் எங்கள் பக்கம் உள்ளனர்: டி.டி.வி. தினகரன் கனவு பலிக்காது அமைச்சர் பேட்டி

98 சதவீத அ.தி.மு.க.வினர் எங்கள் பக்கம் இருப்பதால் டி.டி.வி. தினகரன் கனவு ஒருபோதும் பலிக்காது என அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2018-06-03 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் கோட்டை திப்புசுல்தான் பள்ளிவாசல் மற்றும் பேட்டை அஞ்சுமனை பள்ளிவாசல்களில் நேற்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-

இந்த அரசு சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. வக்புவாரிய தலைவராக பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் அன்வர்ராஜா எம்.பி., சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ரூ.20 ஆயிரம் கோடி வக்புவாரிய சொத்துக்கள் இருப்பதை கண்டறிந்து உள்ளார். அதை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உங்களின் தேவையை உணர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றனர். அ.தி.மு.க. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா எம்.பி. பேசும்போது, ‘கடந்த 50 ஆண்டு காலமாக ரம்ஜான் பண்டிகை வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு உலகம் முழுவதும் ஒரே நாளில் ரம்ராஜன் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான சட்டம் என்பதால், இந்த சட்டத்தை கொண்டு வரக்கூடாது என இந்தியாவிலேயே முதன் முதலாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன். தொடர்ந்து மக்கள் மத்தியிலும் சொல்லி வருகிறோம். இந்த அரசு என்றென்றும் இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சிகளில் பள்ளிவாசல் நிர்வாகிகள், முத்தவல்லிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள், டி.டி.வி. தினகரன் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமான முடிவு வரும், அதன்பிறகு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்வோம் என கூறி உள்ளார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் தங்கமணி அளித்த பதில் வருமாறு:-

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதுபற்றி டி.டி.வி.தினகரன் எப்படி சொல்கிறார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அ.தி.மு.க.வினரை பொறுத்தவரையில் 98 சதவீதம் பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பக்கம் உள்ளனர். தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும்போது டி.டி.வி. தினகரன் கனவு ஒருபோதும் பலிக்காது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்