புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது
புதுச்சேரி சட்டசபை மீண்டும் இன்று கூடுகிறது.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கமாக மார்ச் மாத இறுதியில் தொடங்கி நடைபெறும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதங்களில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 26–ந்தேதி சட்டசபை கூடியது. இந்த கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றினார். தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் (இடைக்கால பட்ஜெட்) பெற்றார்.
இதற்கிடையே கவர்னர் கிரண்பெடி தலைமையிலான மாநில திட்டக்குழு கூடி புதுவை மாநிலத்தில் 2018–19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் ரூ.7,530 கோடி என்று இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுவை சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசுகிறார்கள். இந்த தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் பேசுவது 2 நாட்கள் நீடிக்கும் என்று தெரிகிறது.
இன்றைய கூட்டம் முடிந்ததும் அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது. கூட்டத்தில் புதுவை சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது? பட்ஜெட் தாக்கல் செய்வது எப்போது? என்பன குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
புதுவை சட்டசபை கூடுவதையொட்டி புதுவை கிழக்குப்பகுதி போலீஸ் எல்லைக்குள் 25 நாட்களுக்கு போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலம் போன்றவை நடத்தக்கூடாது.
புதுவை சட்டமன்ற கூட்டத்தில் இலவச அரிசி முறையாக வழங்காதது, ரேசன் கார்டு நிறம் மாற்றுவது, மருத்துவ மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி உள்ளன. இதேபோல் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் தங்களை சட்டமன்ற கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் இன்று (திங்கட்கிழமை) சட்டசபை நோக்கி கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக வர திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்டத்தொடர் சுமார் 20 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.