ஸ்ரீவில்லிபுத்தூரில் பாலத்தில் மோதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூரில் குறுகிய பாலத்தில் மோதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-06-03 21:30 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

திருமங்கலம்–கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், அழகாபுரி முதல் எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கு வரை பல பாலங்கள் மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் பாலத்தின் சுவரின் இருபுறமும் இரவில் மிளிரும் விளக்குகள் ஒட்டிய எச்சரிக்கைப் பலகை இல்லை. இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இனாம்கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ்–பேச்சியம்மாள் தம்பதியினர். இவர்களின் மகன் சேகர் (வயது 27). இவருக்கு வருகிற 17–ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக பத்திரிகை கொடுக்கும் வேலையில் சேகர் ஈடுபட்டிருந்தார்.

இவர் நேற்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர்–ராஜபாளையம் சாலையில் மடவார்வளாகத்தை அடுத்துள்ள தனியார் உணவகம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த குறுகிய பாலம் குறித்த எந்த எச்சரிக்கையும் இல்லாத காரணத்தாலும், அதிகாலை நேரம் என்பதால் சரிவர பாலம் தெரியாததால் மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதியுள்ளது. அதில் பாலத்தின் அடியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த சேகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்