பல்வேறு தடுப்பு நடவடிக்கையையும் மீறி ஆறுகளில் மணல் திருட்டு

போலீசாரை தொழிலாளர்கள் கண்காணித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி லாரிகள், மாட்டு வண்டிகள் மூலம் ஆறுகளில் மணல் திருட்டு நடக்கிறது.

Update: 2018-06-03 22:15 GMT
தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் பகிர்ந்து விடப்படும். தற்போது தண்ணீர் இல்லாததால் ஆறுகள் வறண்டு காணப் படுகிறது.

ஆறுகளில் மணல் குவாரிகளும் அமைக்கப்படவில்லை. ஆனால் கொள்ளிடம், காவிரி, வெட்டாறு, வெண்ணாற்றில் லாரிகள், டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. மணல் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறையினரும், வருவாய்த்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது ஆறுகளில் மணல் அள்ளிக் கொண்டு வரும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக சரிவர விவசாயம் நடைபெறாத காரணத்தினால் விவசாய தொழிலாளர்கள் வருமானத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவர்களில் பலர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி சென்று விற்பனை செய்து தங்களது வாழ்க்கை நடத்தி கொண்டு இருக்கின்றனர். சில நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வருவதை அதிகாரிகள் பார்த்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்யும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி பறிமுதல் செய்யப்படும் மாட்டு வண்டிகளில் ஒரு வண்டிக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அபராதம் கட்ட முடியாதவர்களின் மாட்டு வண்டிகள் தஞ்சை தாலுகா அலுவலகத்திலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஆங்காங்கே சில இடங்களில் மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

தஞ்சை மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் முழு நேரமும் இந்த பணியில் ஈடுபட முடிவதில்லை. வேறொரு பணிக்கு செல்லும் நேரத்தில் மணல் திருட்டு படுஜோராக நடைபெறுகிறது.

இது குறித்து போலீசார் கூறும்போது, ஏற்கனவே போலீசார் பற்றாக்குறை நிலவுகிறது. அடிதடி, விபத்து என தினமும் பல சம்பவங்கள் நடக்கின்றன. இவைகள் குறித்து விசாரணை நடத்துவதுடன் கோவில் திருவிழாக்களில் பாதுகாப்பு பணியையும் மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்கு மத்தியில் மணல் திருட்டு சம்பவங்களையும் தடுக்க வேண்டிய நிலை உள்ளது.

இதற்காக தனியாக குழு எதுவும் அமைக்கப்படவில்லை. நாங்களே போலீஸ் நிலையத்தில் இருக்கும் நபர்களுக்கு ஏற்ப மணல் திருட்டை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மணல் திருட்டில் ஈடுபடுபவர்களே போலீசாரை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். நாங்கள் கண்காணிப்பு பணியை முடித்துவிட்டு போலீஸ் நிலைய பணிக்கு வந்து அமரும் நேரத்தில் மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். நாங்கள் அவர்களை கண்காணிப்பதை போல அவர்களும் எங்களை ஆங்காங்கே ஆட்களை வைத்து கண்காணிக்கின்றனர். மணல் திருட்டை முழுமையாக தடுக்க வேண்டும் என்றால் இதற்காகவே தனிப்படை அமைக்க வேண்டும் என்றனர்.

மாட்டு வண்டி தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, ஏற்கனவே தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆறுகளில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல இப்போதும் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. கட்டிடம் கட்டுவதற்கு மணல் அத்தியாவசியமான ஒன்று. ஏதாவது ஒரு இடத்தில் குவாரி அமைத்து முறைப்படி மணல் அள்ள அனுமதி கொடுத்தால் மணல் திருட்டை தடுக்கலாம். எங்களது வாழ்வாதாரமும் காக்கப்படும் என்றனர். 

மேலும் செய்திகள்